மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு

உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை (Venus of Willendorf) சிற்பமாகும். கி.மு.30,000 வாக்கில் செதுக்கப்பட்ட ஒரு சிறிய தாய் தெய்வ சிற்பம் இது. இன்றைய ஆஸ்திரியாவின் ஒரு மலையடிவாரத்தில் அகழ்வாராய்ச்சியின் போது இந்தச் சிற்பம் கிடைத்தது. இன்று வியன்னா வரலாற்று அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றது.

தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக காலூன்றிய ஒரு வழக்கு. தமிழ் மக்கள் அன்னையையே தம் வாழ்வின் எல்லா கால கட்டங்களிலும் தம்மை காக்கும் தெய்வமாகக் கொண்டிருந்தனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் புதிய வாழ்வைத் தேடி பல தீவுகளுக்கும், தென்னாப்பிரிக்கா, மலாயா, இலங்கை என்று சென்றவர்களும் தாய் தெய்வ வழிபாட்டையும் அதனைச் சுற்றி வழங்கப்படும் சடங்குகளையும் தம்மோடு எடுத்துச் சென்றனர் என்பதை இன்று அம்மன் கோயில்கள் பெருவாரியாக இங்கு வழக்கில் இருப்பதைக் கொண்டு எளிதாக அடையாளம் காண முடிகின்றது.

தங்கள் சொந்தங்களை விட்டுப் பிரிந்து புதிய நிலத்தில் கால் ஊன்றிப் பிழைக்க வந்த மக்கள் சந்தித்த அவலங்கள் பல. பணிக்கு அமர்த்தியவர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க நிர்பந்தித்த சூழல், காடுகளை அழித்து கிராமங்களையும் தோட்டங்களையும் உருவாக்கிய போது சந்தித்த பிரச்சனைகள், சக மனிதர்களாலேயே துன்பத்திற்குள்ளாகப்பட்ட கொடூரமான சூழல் என்ற நிலையில் நம்பிக்கை தரும் ஒரே பொருளாக மாரியம்மன் கோயில்களே பஞ்சம் பிழைக்க வந்த இம்மக்களுக்கு அமைந்தது. இத்தகைய கோயில்களில் ஒன்றாக இலங்கையின் மாத்தளை முத்து மாரியம்மன் ஆலயத்தைக் கூறலாம்.

இலங்கை மலையகப் பகுதிகளில் கோப்பித் தோட்டம் தேயிலைத்தோட்டம் என உருவாக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தோட்டத்து கங்காணிமார்களுக்குக் கோயில்கட்டிக்கொள்ள இடம் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது ஒவ்வொரு கங்காணிக்கும் ஒரு ‘பெரட்டி’ வழங்கப்பட்டிருந்தது. ஆக அவர்களுடைய ஆளுமைக்குள் இருக்கும் பெரட்டியில் கோயில் திருவிழா முடிந்த பின்னர் அடுத்த கங்காணியின் பெரட்டிலுள்ள கோயிலில் திருவிழா நடக்கும் வகையில் முறைப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் பெரிய கங்காணியின் முக்கியத்தைக் காட்டிக்கொள்வதற்காகத் திருவிழாவில் ஊர்வலங்களும் நடத்தப்பட்டதாக அறிகின்றோம். இத்தகைய சிறிய திருவிழாக்கள் முடிந்த பின்னர் இறுதியில் எல்லா சிறு கோயில்காரர்களுமாக இணைந்து பெரும் திருவிழாவினை எடுப்பது வழக்கமாயிருந்தது. இத்தகைய கோயில்களில் அன்று சாமிக்கு மந்திரம் சொல்வதற்கு பூசாரிமார்கள் இருந்தனர். இவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் உள்ளவர்களிலேயே ஒருவராக இருப்பார். உடுக்கடித்து ‘மண்டு’ வைத்து ‘சாமியை வரவழைத்துக்’ குறி சொல்லி வழிபாடு நடைபெறும் . கரகம் எடுத்தல், காவடி எடுத்தல் வேல்குத்துதல் போன்றவையும் வழிபாட்டில் ஒரு அங்கமாக இருக்கும்.

பொதுவாக இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் காணப்படும் தெய்வங்களாக முத்துமாரியம்மன், காளியம்மன் ஆகிய பெண்தெய்வங்களையும் முருகன், விநாயகர், மாடசாமி முனியாண்டி, இடும்பன், முன்னடையான், ரோதை முனி, மதுரை வீரன், சிந்தாகட்டி, கறுப்பண்ணசாமி, கவாத்துசாமி, ஐயனார், அழகுமலையான் ஆகிய ஆண் தெய்வங்களுக்கான கோயில்களும் உண்டு. இவற்றோடு ஊமையன் கோயில், சமாதிகள் அடங்கிய தென்புலத்தார், நாகதம்பிரான், அரசமரம், கருடாழ்வார் போன்ற வழிபாடுகளும் இருந்தாலும் மாரியம்மன் வழிபாடே மலையக மக்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாக அறியப்படுகின்றது. உதாரணமாக கண்டியில் 57 மாரியம்மன் ஆலயங்களும், நுவரெலியாவில் 225 மாரியம்மன் ஆலயங்களும், கேகாலையில் 46 மாரியம்மன் ஆலயங்களும், களுத்துறையில் 45 மாரியம்மன் ஆலயங்களும் இருப்பதைக் காணலாம்.

இப்புகைப்படத்தில் தமிழகத்திலிருந்து மலையகத்தோட்டத்தில் பணிபுரிய வந்த தமிழ்ப்பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கியவாறு நிற்பதைக் காணலாம். இது 1901 அல்லது 1902ம் ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். ஒரு அஞ்சல் அட்டையின் முகப்புப் பக்கத்தில் அச்சிடப்பட்ட புகைப்படம் இது.

குறிப்பு- மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும், மாத்தளை பெ.வடிவேலன் (1997)

நன்றி-
சேகரிப்பு:திரு.முருகையா வேலழகன், ஓஸ்லோ, நோர்வே. ( இணையம் வழி ஏலத்தில் வாங்கப்பட்ட கி.பி 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால புகைப்படம்)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[ தமிழ் மரபு அறக்கட்டளை]

Author: Dr.K.Subashini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *