இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5

– நாள் 5 –

மறுநாளின் பெரும்பகுதி பயணத்தில் கழிந்தது. மாலை வேளையில் கடினமான மலைப்பாதையில் காமன் கூத்து ஆவணப்பதிவு செய்வதற்காகச் சென்றோம். இருள் கூடிய இரவை அழகாக்கியது பழமை மாறாத காமன் கூத்து ஆவணப்பதிவு. எளிமையே உருவான கலைஞர் தம் அகவை பொருட்படுத்தாது குதூகலத்தோடு நடித்துக் காட்டிய கூத்து இரவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

மலையகத்தின் மிகச்சிறந்த கலாச்சாரக் கூறுகளுள் ஒன்று இந்த காமன் கூத்து. இதன் 32க்கும் மேற்பட்ட கட்டங்களையும் தவறாமல் பழமை மாறாமல் இன்றும் பின்பற்றும் கூத்துக்கலைஞர்கள் இவர்கள். கம்பம் நடுவதிலிருந்து ரதி மன்மதன் திருமணம் பின்னர் கூத்து என்று மூன்று நாளும் திறம்பட நடக்கும் கூத்தைக் காண பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர்.

கூத்துக் கலைஞர்கள் பிரமனாகவும், விட்டுணுவாகவும் ரதியாகவும் ஆசையாக ஆடியும் நடித்தும் காட்டி வரலாறு சொல்லிக்காட்டியபின் தயக்கத்தோடு ‘இது தான் எங்க சொத்து’ என்று கண்கலங்கச்சொன்னது நெகிழ்ச்சியளித்தது. நாம் அவர்களது கலையை விற்றுக்காசாக்கி விடுவோமென்ற பயம் அவர்களுக்கு. அப்படித்தான் நம் கலைஞர்களை வைத்திருக்கிறோம் நாம், பயத்திலும் இருளிலும் அக்கறையற்ற உதாசீனத்திலும்.

அப்படி ஏதும் செய்துவிட மாட்டோம் உங்களைப்பற்றி ஊருக்குச்சொல்கிறோம். உங்கள் கலையும் உங்கள் பெயரும் காலம் தாண்டியும் வாழும் என்று நம்பிக்கையளித்துவிட்டு வந்தோம்.

நம்பிக்கை அது மட்டுமே நிதர்சனம்.

வரலாறு எவ்வளவு உயர்வானதாயினும், முன்னோர் எத்தனைச் சிறப்புடையவராயினும் அவர்கட்கும் முடிவென்று ஒன்று உண்டு. இனி வரும் தலைமுறை நம்மை விடவும் சீரும் சிறப்புமாய் கொண்டாட்டமாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தானே அத்தனை அரசர்களும் தலைவர்களும் இருந்திருப்பார்கள்.

நமக்கடுத்தத் தலைமுறைகளும் அப்படி இருக்கவேண்டுமென்ற ஆசையும் நம்பிக்கையும் மட்டும் தானே நமக்கும் மிச்சம் இருக்கிறது. அதைச் சாயவிடாமல் காப்பதன்றி வேறேதும் செய்ய முடியாது நம்மால். அதற்கு நாம் செய்யக் கூடியவற்றில் முதன்மையானது வரலாற்றை ஆவணப்படுத்தல் தான்.

நடந்தவற்றையும் நடப்பவற்றையும் ஆவணப்படுத்துதலின் மூலம் நமக்கான வேரை நமது விதைகளினூடே நினைவுகளாகச்செலுத்திவிடும் சாத்தியமிருக்கிறது.

நாளைய உலகம் நலம்பெற வேண்டுமெனில் இன்றும் நேற்றும் எப்படி இருந்ததென்ற படிப்பினை அவர்கட்குத் தேவை.

அதைச்செய்யும் பணியில் நிறைவாய் நாம். மனநிறைவோடு இலங்கை ஆய்வுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பினோம்.

நிறைவுற்றது

தொடர்பு:
மலர்விழி பாஸ்கரன்- (எழுத்தாளர் மாயா)
mayanmagal@gmail.com

Author: Administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *